வீடு புகுந்து அ.தி.மு.க.பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்


வீடு புகுந்து அ.தி.மு.க.பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 28 March 2022 2:02 AM IST (Updated: 28 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

பேளூரில் வீடு புகுந்து அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

வாழப்பாடி:-
பேளூரில் வீடு புகுந்து அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்
வாழப்பாடி அருகே உள்ள பேளூர் வீராசாமி தெருவில் வசிப்பவர் வெங்கடேசன். அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி கவிதா (வயது 29). இவர் பேளூர் பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 10-வது வார்டில் வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் நடந்த பேளூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் கவிதா தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் இவருடைய கணவர் வெங்கடேசனை தாக்கினர். போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை கவிதாவின் வீட்டுக்கு சிலர் சென்றனர். அவர்கள் கவிதாவை தாக்கி, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வெங்கடேசனையும் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கவிதா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். 
2 பேர் கைது
அந்த புகாரின்பேரில் போலீசார் வெற்றிகாந்தி (37), ரமேஷ் (46), குழந்தைவேல் (52), கதிரவன் (45), நிசாந்த் (32), தினேஷ் (27), ஹரி (26), சுதா (39), ராணி (55) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெற்றிகாந்தி, ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
இதனிடையே பேளூர் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ஸ்ரீஹரி, தன்னையும், அவரது பாட்டியையும் வெங்கடேசன், சங்கர், அரவிந்த் ஆகியோர்  தாக்கியதாக வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வெங்கடேசன், சங்கர், அரவிந்த் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பரபரப்பு போஸ்டர்
இந்தநிலையில் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கவிதா குறித்து பேளூர் முழுவதும், அ.தி.மு.க. சார்பில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story