தமிழக பொருளாதாரம், வளர்ச்சியை மேம்படுத்தும்


தமிழக பொருளாதாரம், வளர்ச்சியை மேம்படுத்தும்
x
தினத்தந்தி 28 March 2022 2:02 AM IST (Updated: 28 March 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் தமிழக பொருளாதாரம், வளர்ச்சியை மேம்படுத்தும் என சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

சேலம்:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் தமிழக பொருளாதாரம், வளர்ச்சியை மேம்படுத்தும் என சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன் பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிர்வாகிகளை சேலத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாட்கள் (இன்றும், நாளையும்) பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தேசத்தையே விற்பனைக்கு கொண்டு வரும் பா.ஜ.க. அரசின் நிலைபாட்டை எதிர்த்து அகில இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தவறான ஆட்சி நிர்வாகம்
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கு உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் அங்கு போர் நடப்பதற்கு முன்பே பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தவறான ஆட்சி நிர்வாகம், மக்கள் நலனில் அக்கறை இல்லாததாலும், வெறுப்பு அரசியலை வெளிப்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் நம்பிக்கை தருகிறது. இது தமிழக பொருளாதாரம், வளர்ச்சியை மேம்படுத்தும். கடந்த 10 மாத தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பி பார்க்கின்றனர்.
விமர்சனம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அரசியல் பேசாமல் அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து அவதூறு பேசி வருகிறார். தன் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் தி.மு.க.வை பற்றியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். அவதூறு பேசியதற்காக அண்ணாமலை மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக முதல்-அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். அதை விரைவில் ஒப்புதலுக்கு அனுப்புவார் என நம்புகிறோம். இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும் இசைவு அளிக்க வேண்டும். சேலம் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியம் அளித்து பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் நாவரசன், மாவட்ட பொருளாளர் காஜாமொய்தீன், மாநகராட்சி கவுன்சிலர் இமயவரம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story