‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாக மக்கள் பார்க்கிறார்கள்’
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாக மக்கள் பார்க்கிறார்கள் என்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓமலூர்:-
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை குடும்ப சுற்றுலாவாக மக்கள் பார்க்கிறார்கள் என்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
குடும்ப சுற்றுலா
சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஓமலூரில் உள்ள நடராஜ செட்டியார் திருமண மண்டபம் மற்றும் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதனை கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் துபாய் சென்றதாக கூறப்பட்டது. அவருடன் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் சென்றது சரி. ஆனால் அவரின் துபாய் பயணத்தை மக்கள் குடும்ப சுற்றுலாவாகத்தான் பார்க்கிறார்கள். துபாய் சென்றது தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா?, அல்லது குடும்பத்திற்கு புதிய தொழிலை தொடங்கவா? என மக்கள் கேள்வி கேட்கின்றனர். குடும்பமே துபாய் சென்றது தனிப்பட்ட காரணத்திற்காகத்தான் என மக்கள் பேசி கொள்கின்றனர்.
வேடிக்கை
கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் சார்பில் அரங்கு தொடங்கியிருப்பது வேடிக்கையாக உள்ளது. நான் வெளிநாடு சென்றபோது பயணிகள் விமானத்தில்தான் சென்றேன். துறை அமைச்சர்களும், செயலாளர்கள் மட்டுமே உடன் வந்தனர். லண்டனுக்கு சென்றபோது, நம்முடைய ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த ஆய்வு செய்தோம். அதிநவீன மருத்துவ கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் பார்வையிட்டோம்.
கிங்ஸ் மருத்துவமனையை போல் தமிழ்நாட்டின் மருத்துவமனைகளை மாற்றுவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நான் அமைச்சர்களுடன் சுற்றுலா சென்றதாக அவதூறு கூறிய மு.க.ஸ்டாலின், இப்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வரவே நாங்கள் வெளிநாடு சென்றோம். அதன் அடிப்படையில் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் கொண்டு வரப்பட்டது.
போராட்டம்
விருதுநகர் பாலியல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு கோர்ட்டை நாடுவோம்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. பாலியல் கொடுமைகள் பல மடங்கு அதிகரித்து விட்டது. அ.தி.மு.க.வில் 25 மாவட்டங்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிந்த பிறகு நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் போராட்டம் அறிவிப்போம்.
சசிகலாவை சேர்க்க வாய்ப்பு இல்லை
தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்டங்களும், தலைமை கழகமும் இணைந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. நானும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து சசிகலா நீக்கப்பட்டதாக அறிவித்து விட்டோம். அதெல்லாம் முடிந்து விட்டது. மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை.
யாராலும் அதை எதிர்த்து புத்துயிர் கொடுக்க முடியாது. சசிகலா குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. எப்போதும் ஒரே கருத்து தான்.
எக்ஸ்பிரஸ் வே
சேலம்-சென்னை 8 வழிச்சாலையை ‘எக்ஸ்பிரஸ் வே’ என பெயர் மாற்றி கொண்டு வர தி.மு.க. முயற்சித்து வருகிறது. 8 வழிச்சாலை திட்டம் கைவிடப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு உள்ளது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் மணி, சித்ரா, ஜெய்சங்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story