தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுமா?
ஜோலார்பேட்டை- ஈரோடு வழித்தடத்தில் சேலம் வழியாக பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில்கள் மூலம் சேலம் வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பயன் அடைந்து வந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த ரெயில்ள், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து ஜோலார்பேட்டை- ஈரோடு வழித்தடத்தில் சேலம் வழியாக செல்லும் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும்.
-காமராஜ், பொம்மிடி, தர்மபுரி.
வீணாகும் குடிநீர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் திறந்து விடும் வால்வு உடைந்து குடிநீர் ஆறாக ஓடி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வால்வை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-ஊர்மக்கள், பள்ளிபாளையம், நாமக்கல்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த கூடலூர் ஆதிதிராவிடர் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கமலர், கூடலூர், சேலம்.
பூட்டியே கிடக்கும் குடிநீர் நிலையம்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பொன்நகர் மெயின் ரோட்டில் நகராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பயன்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தேவராஜ், பொன்நகர், சேலம்.
சாலை சீரமைக்கப்படுமா?
சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் இருந்து பைபாஸ் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சன்னியாசிகுண்டு, சேலம்.
நடவடிக்கை எடுப்பார்களா?
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைக்கப்பட்டது. தற்போது இது பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் அருகில் அருகில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும்
எடப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள் வட்ராம்பாம்பாளையம், சென்றாயனூர், பெரமாச்சிபாளையம், சோழக்கவுண்டனூர் வழியாக நாமக்கல் குமாரபாளையம் பஸ் நிலையம் வரை இயக்கப்பட்டது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பஸ் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.
-இளமுருகன், எடப்பாடி, சேலம்.
Related Tags :
Next Story