நடப்பு கூட்டத்தொடரில் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுவது சந்தேகம்?
நடப்பு கூட்டத்தொடரில் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது
பெங்களூரு: நடப்பு கூட்டத்தொடரில் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
மதமாற்ற தடை சட்ட மசோதா
கர்நாடக அரசு, பெலகாவி சுவர்ண சவுதாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கர்நாடக மத சுதந்திர பாதுகாப்பு அதாவது மதமாற்ற தடை சட்ட மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது. காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அதே கூட்டத்தொடரில் அந்த மசோதா மேல்-சபையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அங்கு பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் அந்த மசோதா ஒப்புதலுக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் 75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் தற்போது பா.ஜனதாவுக்கு 37 உறுப்பினர்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவை. சுயேச்சை உறுப்பினர் லகன் ஜார்கிகோளி பா.ஜனதாவின் ஆதரவாளராக உள்ளார்.
ஒப்புதலை பெற தயார்
அதனால் அவர் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்ட மசோதா இன்னும் சபையின் ஒப்புதலுக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. இந்த கூட்டத்தொடர் இன்னும் 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மேல்-சபை அவை முன்னவரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியுமான கோட்டா சீனிவாச பூஜாரி கூறுகையில், "மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு சபையின் ஒப்புதலை பெற நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆனால் எங்கள் கட்சி தலைமை அதுபற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. கட்சியின் அனுமதி கிடைத்ததும் அந்த மசோதா நிறைவேற்றப்படும்" என்றார்.
அதேநேரத்தில் சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, மதமாற்ற தடை சட்ட மசோதா இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவது சந்தேகம் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story