பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்; சாம்ராஜ்நகரை சேர்ந்த 5 பேர் கைது


பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்; சாம்ராஜ்நகரை சேர்ந்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 2:40 AM IST (Updated: 28 March 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பெங்களூரு: பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 பேர் கைது

பெங்களூரு கோரமங்களா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்வதாக துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீநாத் ஜோஷிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை நடவடிக்கை எடுக்கும்படி கோரமங்களா போலீசாருக்கு, அவர் உத்தரவிட்டார்.

 இதையடுத்து, அந்த கும்பலை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினார்கள். இந்த நிலையில், கோரமங்களா 1-வது பிளாக், பல்லாரி காலனி பகுதியில் சுற்றி திரிந்த 5 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் இருந்த பைகளில் சோதனை நடத்திய போது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 5 பேரும் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா புஷ்பாபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

ரூ.40 லட்சம் கஞ்சா

இவர்கள் 5 பேரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து, பெங்களூருவில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. ஏற்கனவே 5 பேரும் கஞ்சா விற்பனை, கொலை, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக ஜே.பி.நகர், மடிவாளா, ஆடுகோடி, கோரமங்களா, கே.ஆர்.புரம் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவர்கள் 5 பேரிடம் இருந்து 102 கிலோ கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். கைதான 5 பேர் மீதும் கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story