தமிழகத்தில் சனாதன சக்திகள் ஊடுருவ முயற்சிப்பதை எதிர்க்க வேண்டும்- ஈரோட்டில் வைகோ பேச்சு
தமிழகத்தில் சனாதன சக்திகள் ஊடுருவ முயற்சிப்பதை எதிர்க்க வேண்டும்- ஈரோட்டில் வைகோ பேச்சு
ஈரோடு
ஈரோட்டில் நேற்று நடந்த ம.தி.மு.க. கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவுக்கே சமூக நீதிக்கு கலங்கரை விளக்காக திகழ்கிற தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோடு மாநகரில் ம.தி.மு.க. பொதுக்குழு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. மாநாடு திடலுக்கு அருகில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் வந்தார்கள். நிறைவு நிகழ்ச்சியாக பேரணி நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கருணாநிதி பங்கேற்று உரையாற்றினார்.
துன்புற்றோருக்கு உதவி செய்ய, துயர்படுபவர்களின் கண்ணீரை துடைப்பதற்கு திராவிட இயக்கம் என்றைக்கும் பாடுபடும். பெரியார் மண்ணில் இருந்து சொல்கிறேன். பெரியார், அண்ணா, கருணாநிதி, இன்றைக்கு ஸ்டாலின் ஆகியோர் திராவிட இயக்கத்தை கட்டிக்காத்து வருகிறார்கள். இந்த நேரத்தில், இந்த பாசறை அமைப்பை சீர்குலைத்து விட வேண்டும் என்று இந்துத்துவா சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சிக்கின்ற நேரத்தில் அதை எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
நம்முடைய இயக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இளைஞர்கள் அதிகமாக வர வேண்டும். பெரியார் சிந்தனைகளையும், அண்ணா, கலைஞர் எழுத்துக்களை படிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
இந்த விழாவில் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story