பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 27 March 2022 9:46 PM GMT (Updated: 27 March 2022 9:46 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணை
சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ. தூரத்திலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ. தூரத்திலும் பவானி ஆறும் மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை இந்த அணைக்கு உண்டு.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
பாசனம்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கால்வாய் இரட்டைப்படை மதங்களுக்கும் பாசனத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தத் தண்ணீர் 12 டி.எம்.சி.க்கு மிகாமல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை சுழற்சி முறையில் 67 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
3-வது சுற்று தண்ணீர் திறப்பு
கீழ்பவானி பாசனத்துக்காக திறக்கப்பட்ட 2-வது சுற்று தண்ணீர் கடந்த 19-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் 3-வது சுற்று தண்ணீர் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 10 தேதி காலை 8 மணிக்கு 3-வது சுற்று தண்ணீர் நிறுத்தப்படும்.
நேற்று காலை 10 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 756 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Next Story