பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் ஆபத்தான கிணறு
பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் ஆபத்தான கிணறு உள்ளது.
பெரம்பலூர்:
பள்ளி வளாகத்தில் பொது கிணறு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி அருகே கிராம சேவை மைய கட்டிடம், அங்கன்வாடி, துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை ஆகியவையும் உள்ளது. அங்கன்வாடிக்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கட்டிடங்களை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வளாகத்திலேயே தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கிணற்றில் இருந்து எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் திறந்தவெளி கிணறு இருந்தால் இரும்பு வலைகள் கொண்டு மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த கிணறு இரும்பிலான வலைகள் கொண்டு மூடப்படவில்லை. தினமும் மதிய வேளையில் பள்ளி, அங்கன்வாடி குழந்தைகள் அந்த கிணறு அருகே சென்று விளையாடுகின்றனர். கிணற்றை எட்டி பார்க்கின்றனர். இதனால் அவர்கள், கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.
இரும்பு வலைகள் கொண்டு...
மேலும் விடுமுறை நாட்களில் அந்தப்பகுதி இளைஞர்களும் அந்த வளாகத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். பந்து கிணற்றுக்குள் விழுந்தால், அதனை உயிர் பயமின்றி இறங்கி எடுக்கின்றனர். இது தொடர்பாக பள்ளி மாணவ-மாணவிகள், அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் கிணற்றுக்கு இரும்பு வலைகள் கொண்டு மூடப்படவில்லை.
எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி, அங்கன்வாடி வளாகத்தில் உள்ள திறந்தவெளி பொது கிணறுக்கு இரும்பிலான வலைகள் கொண்டு மூட வேண்டும் என்று பள்ளி, அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story