கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 19-வது ஓவிய சந்தை;முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 19-வது ஓவிய சந்தையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். இதில் 1,500 ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை வைத்தனர்.
பெங்களூரு: கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 19-வது ஓவிய சந்தையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார். இதில் 1,500 ஓவிய கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை வைத்தனர்.
தன்னாட்சி அதிகாரம்
கர்நாடக சித்ரகலா பரிஷத் சார்பில் 19-வது ஓவிய சந்தை பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. பெங்களூரு குமரகிருபா ரோட்டில் இந்த ஓவிய சந்தை தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு ஓவிய சந்தையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஆண்டுதோறும் இங்கு ஓவிய சந்தை நடக்கிறது. அதே போல் இந்த ஆண்டும் இந்த ஓவிய சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஓவிய கல்லூரி தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. அதனால் இந்த ஓவிய கல்லூரியை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருகிற கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும்.
ஓவிய சந்தை
இதன் மூலம் ஓவிய கல்லூரிக்கு புதுபொலிவு வழங்கப்படும். ஓவிய சந்தை என்பது ஒரு நல்ல விஷயம். கலை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறன். சில கலைகள் குலத்தின் அடிப்படையில் வந்திருக்கும். கலை நமக்குள் இருந்தால் அதற்கு மதிப்பு இல்லை. அதை வெளிப்படையாக எடுத்து காட்டினால் தான் மதிப்பு கிடைக்கும். கலைஞனுக்கு திருப்தி இருக்க வேண்டும்.
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஓவிய சந்தை தற்போது நடக்கிறது. இந்த சந்தை ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயாராக உள்ளது. கலாசாரம் மிக முக்கியம். நமது கலாசாரத்தால் தான் இந்தியா உலகவில் தனித்தன்மையுடன் நிற்கிறது. அதற்காக இந்த ஓவிய சந்தையை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
கொரோனா பரவல்
இந்த விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர், ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.சி., சித்ரகலா பரிஷத் தலைவர் பி.எல்.சங்கர், முன்னாள் மந்திரி ராணிசதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓவிய சந்தைக நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஓவிய சந்தை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தையில் சுகாதாரத்துறையின் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.
1,500 கலைஞர்கள் பங்கேற்பு
இந்த ஓவிய சந்தையில் கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,500 கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் ஓவிய படைப்புகளை வைத்திருந்தனர். இந்த ஓவிய சந்தையை காண பெங்களூருவை சேர்ந்த ஏராளமானவர்கள் வந்திருந்தனர். சிவானந்தா சர்க்கிளில் இருந்து குமரகிருபா ரோட்டின் இருமருங்கிலும் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கண் கவர் ஓவியங்களை பார்வையாளர்கள் வாங்கி சென்றனர். சில ஓவியர்கள், பார்வையாளர்களை அங்கேயே உட்கார வைத்து அவர்களின் உருவத்தை அதே இடத்தில் வரைந்து கொடுத்தனர். ஓவியர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதன் காரணமாக குமரகிருபா சாலையில் நேற்று போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிப்பு
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவளா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு ஓவிய சந்தை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவர்கள் தொடர்பான ஓவியங்கள் அதிகளில் இடம் பெற்று இருந்தன.
ஓவிய சந்தையை தொடங்கி வைத்த பசவராஜ் பொம்மை, குமரகிருபா சாலையில் நடந்து வந்து சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை பார்த்து மகிழ்ந்தார். ஓவியர்களையும் உற்சாகப்படுத்தினார். ஓவிய சந்தையை முன்னிட்டு: அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story