தேனி உள்பட 12 இடங்களில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் 1,062 பேர் கைது
தேனி உள்பட 12 இடங்களில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து 1,062 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி:
வேலை நிறுத்தம்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தேசிய பணமாக்கல் திட்டம், தொழிலாளர் குறியீடு போன்றவற்றை கைவிட வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.
அதன்படி தேனி மாவட்டத்தில் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனியில் பழைய பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை நோக்கி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர். இதற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., யூ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
1,062 பேர் கைது
பின்னர் அவர்கள் நேரு சிலை சிக்னல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த மறியலால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 187 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அதுபோல், போடியில் 2 இடங்களில் சாலை மறியல் நடந்தது. மேலும், தேவாரம், ஆண்டிப்பட்டி, சின்னமனூர், கடமலைக்குண்டு, தென்கரை, கம்பம், போடி அருகே சில்லமரத்துப்பட்டி, கோம்பை, கூடலூர் என மொத்தம் 12 இடங்களில் நேற்று சாலைமறியல் நடந்தது.
இந்த மறியலில் ஈடுபட்ட 380 பெண்கள் உள்பட 1,062 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தேனி தபால் அலுவலகம் முன்பு அகில இந்திய தபால் ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் உமாபதி, அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்க கோட்ட செயலாளர் தெய்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தபால் துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், அனைத்து தபால் நிலையங்களுக்கும் சீரான மற்றும் வேகமான இணையதள இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கம்பம்
கம்பத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் முருகேசன் தலைமையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் ஆதிமூலம், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு போக்குவரத்து சிக்னல் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு மத்திய அரசை கண்டித்து சாலைமறியல் செய்தனர். இதையடுத்து உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 89 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story