பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்;
பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகம் மூலம் தினந்தோறும் 5,000 மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த துறைமுகத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து மீன் மற்றும் கருவாடுகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
10 வருடங்களுக்கு முன்பு
இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பழையார் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிதாக வலை பின்னும் கூடம், மீன் விற்பனைகூடம், குடிநீர்தேக்க தொட்டி, வடிகால்வாய்க்கால்கள், ஆண் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிவறை வசதிகள், மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் நிறுத்துவதற்கு வசதியாக படகு அணையும் தளம் மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கழிவுநீரை மின் மோட்டார் மூலம் சேகரித்து அதனை சுத்திகரித்து அப்பகுதியில் புதியதாக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பயன்படுத்தி துறைமுக வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டன.
நடவடிக்கை
சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டு சில மாதங்களே இயங்கியது. பின்னர் தொடர்ச்சியாக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக செயல்பாடு இன்றி எந்த பயனும் இன்றி வீணாக உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள விலை உயர்ந்த மின் மோட்டார்கள், நவீன நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் எந்திரங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு எந்த பயனும் இல்லாமல் உள்ளது. எனவே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல வருடங்களாக செயல்படாமல் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story