தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 March 2022 6:00 PM IST (Updated: 28 March 2022 6:00 PM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு அரசு தொழிற்சங்கங்கள் சார்பில் தாராபுரம் மற்றும் காங்கயத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 
வேலை நிறுத்தம்
தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தேசிய பணமயமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தவித பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வருமானவரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். இயங்குகிற மாநில நல வாரியங்களை சீர்குலைக்ககூடாது. அங்கன்வாடி, சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தையும் சமூகப்பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும். கொரோனா பெரும் தொற்று பணிபுரிந்த முன் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பும் காப்பீடு வசதிகள்வழங்கவேண்டும். விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்படுத்தும் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு விலையை குறைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க கோரி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது என மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசின் போக்குகளை கண்டித்து அகில இந்திய பொது  வேலைநிறுத்தம் 28 மற்றும் 29 ஆகிய  தேதிகளில்  2 நாட்கள் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன.
சாலை மறியல் 
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில்  8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாராபுரம் அண்ணாசிலை அருகே நேற்று நடந்த சாலை மறியலுக்கு  எல்.பி.எப் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 
மறியல் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் என்.கனகராஜ், பி.பொன்னுச்சாமி மற்றும்  ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., வங்கி ஊழியர் சங்கம்,  இன்ஸ்சூரன்ஸ் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம் என அனைத்து தொழிற்சங்கங்கள் உள்பட 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வங்கிகள் இயங்க வில்லை
 போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் கலந்து ெகாண்டதால் ெபாதுத்துறை வங்கிகள் செயல்படவில்லை. இதனால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. தபால் நிலையம், இன்சூரன்ஸ் அலுவலகம் வெறிச்சோடியது. மேலும் அரசு பஸ்கள் இயங்க வில்லை. அனைத்து பஸ்களும் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 
அரசு ஊழியர் சங்கத்தினரும், அரசு ஊழியர்களும் தங்கள் பணிகளை புறக்கணித்து தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தாராபுரம் வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் தலைமை தாங்கினார். . ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் வட்டக்கிளை செயலாளர் இல.தில்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கயம்
 காங்கேயம் பஸ் நிலைய வளாகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கம், அனைத்து தொழிற்ச்சங்கங்கள் சார்பாக நேற்று காலை 10.30 மணியளவில், சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்க மாநில, மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள், பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில்  சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காங்கயம் போலீசார் மாற்று சாலை வழியாக வாகனங்களை செல்ல அனுமதித்து, போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 255 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் காங்கேயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story