ஆற்காட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயங்கியதால் பொதுமக்கள் அவதி


ஆற்காட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயங்கியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 28 March 2022 6:49 PM IST (Updated: 28 March 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வங்கிகளும் செயல்படவில்லை.

ஆற்காடு 

ஆற்காட்டில் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வங்கிகளும் செயல்படவில்லை.

குறைந்த அளவே பஸ்கள் இயங்கின

பொதுப்பணித்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்ட விரோத தொகுப்புகளை கைவிடவேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம்  அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி  வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. அரசு போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆற்காடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினமும் 84 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் நேற்று 35 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊரான ஆற்காடு வந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல பஸ்நிலையத்தில் காத்துக்கிடந்தனர்.

மாணவ- மாணவிகள் அவதி

குறைந்த எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் பஸ்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

 பொதுத் துறை வங்கிகள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் வங்கிச்சேவையும், பண பரிவர்த்தனையும் முடங்கியது.  பொதுவேலை நிறுத்தம் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க ஆற்காடு நகரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Next Story