வீடுகளை காலிசெய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தச்சாம்பாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தச்சாம்பாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறைத்தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் போர்டிகோ பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சோதனைக்கு பின்னரே மனு அளிக்க உள்ளே அனுமதித்தனர்.
இதில் வேலை வாய்ப்பு, சாதி சான்றிதழ், கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுகஙகொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அதனை ஒப்படைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டாம்
சேத்துப்பட்டு தாலுகா தச்சாம்பாடி கிராமம் சவேரியார் தெருவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றோம். இந்த பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றோம். எங்களது குடும்பத்தில் யாரும் அரசு வேலையிலோ, நிரந்தர ஊதிய பணிகளிலோ பணிபுரியவில்லை.
நாங்கள் வசித்து வரும் வீட்டிற்கு வீட்டு வரி மற்றும் மின்கட்டணம் செலுத்தி வருகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் வீடு அல்லது வீட்டு மனை எதுவும் கிடையாது.
இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு செய்து, அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு அளவீடு செய்து, பின்னர் பல்வேறு காரணங்களை கூறி பட்டா வழங்க காலதாமதம் செய்து வந்தனர். வேறு வழியின்றி வேறு இடமும் இல்லாமல் காலம், காலமாக இந்த இடத்தில் வசித்து வருகிறோம்.
இந்த நிலையில், எங்கள் வீடு உள்ள பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே எங்களின் நிலையை கருதி வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீஸ் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story