80 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை
கூடலூர் பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த 80 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கூடலூர்
கூடலூர் பகுதியில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த 80 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் அதன் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் ஆற்று வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆற்று வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் மற்றும் நில அளவை துறையினர் பதிவேடுகளை கொண்டு கள ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் எல்லைகளை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
ஆய்வு பணி
கூடலூர் தாலுகாவில் மண்டல துணை தாசில்தார் சாந்தி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அளவையர் நசீர், கிராம உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் ராஜகோபாலபுரம் முதல் அக்ரஹாரம், காசிம்வயல், துப்புகுட்டி பேட்டை, 1-ம் மைல் உள்பட பல்வேறு இடங்களில் நில அளவை மேற்கொண்டனர். தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆற்று வாய்க்கால்களிலும் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
80 பேருக்கு நோட்டீஸ்
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:-
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகாவில் சுமார் 80 பேர் கட்டிடங்கள் மற்றும் விவசாய பயிர்கள் மூலம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இதனால் சட்டப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை தாங்களாகவே முன்வந்து அகற்றவேண்டும். இல்லையெனில் வருவாய் துறை மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story