பழனி முருகன் கோவிலில் ரவிசங்கர் சாமி தரிசனம்
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பழனி:
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டரில் ராமேசுவரம் சென்று, அங்குள்ள ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று ராமேசுவரத்தில் இருந்து பழனிக்கு ஹெலிகாப்டரில் வந்தார்.
இதற்காக பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பிரத்யேகமாக ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்திறங்கிய ரவிசங்கர், பின்னர் கார் மூலம் பழனி அடிவாரம் சென்றார். அங்கிருந்து ரோப்கார் மூலம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பழனியில் தனியார் மண்டபத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரவிசங்கர் பேசினார். அப்போது, மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க தியானம் செய்ய வேண்டும் என்றார். பின்னர் பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதாசுப்புராஜ், மேலாளர் பெரியராஜ், பாலாஜி மருத்துவமனை டாக்டர் செந்தாமரை செல்வி உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து ரவிசங்கர் ஹெலிகாப்டரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.Related Tags :
Next Story