200 நெல் மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்
காரைக்காலில் இருந்து திருப்பூண்டி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்த 200 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த கிராம நிர்வாக அலுவலர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெளிப்பாளையம்:
காரைக்காலில் இருந்து திருப்பூண்டி கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்த 200 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த கிராம நிர்வாக அலுவலர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புகார்
வெளி மாநில, வெளி மாவட்ட நெல் மூட்டைகள் நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதனையடுத்து கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகை அருகே திருப்பூண்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மினி லாரியில் இருந்து நெல் மூட்டைகளை சிலர் இறக்கி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த குழுவினர் நெல் மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை
விசாரணையில் மினி லாரியில் இருந்து இறக்கிய நெல் மூட்டைகள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய 200 நெல் மூட்டைகளை கொண்டு வந்திருப்பதும், இந்த நெல் மூட்டைகளை காரைக்கால் மாவட்டம் திருவேட்டக்குடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் கிராம நிர்வாக அலுவலர் அனுமதியுடன் விற்பனைக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.
200 நெல் மூட்டைகள் பறிமுதல்
இது குறித்து முதுநிலை மண்டல மேலாளர் கீழையூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 200 நெல் மூட்டைகளுடன் மினிலாரியை பறிமுதல் செய்து நாகை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரைக்கால் மாவட்ட நெல் மூட்டைகளை திருப்பூண்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய அனுமதி அளித்த கிராம நிர்வாக அலுவலர் யார்? என்பது குறித்து கீழ்வேளூர் தாசில்தார் அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை எடுத்து வர அனுமதி அளித்த நேரடி நெல் கொள்முதல் பணியாளர் யார?் என்பது குறித்தும் முதுநிலை மண்டல மேலாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story