கர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை
தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின
பெங்களூரு, மார்ச்.29-
தேசிய அளவிலான தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.
கர்நாடகத்தில் போராட்டம்
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்களை பாதிக்கும் மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து 28, 29-ந் தேதிகளில் தேசிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். கேரளா உள்பட பல மாநிலங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடகத்திலும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் பீனியா தொழிற்பேட்டை, பொம்மனஹள்ளி, பொம்மசந்திரா, கே.ஆர்.புரம், எலகங்கா, பிடதி, கெங்கரி மற்றும் ஆனேக்கல் உள்ளிட்டஇடங்களில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் பெங்களூருவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின. கல்வி நிலையங்கள், அரசு-தனியார் துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டு எப்போதும் போல் செயல்பட்டன.
வங்கி சேவைகள்
பிற சேவைகளிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சில இடங்களில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சி.ஐ.டி.யு. நிர்வாகி பிரகாஷ் கூறியதாவது:-
பெங்களூருவில் நாங்கள் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்தவில்லை. மாறாக பொம்மனஹள்ளி உள்பட தொழிற்பேட்டைகள் உள்ள பகுதிகளில் தொழிலாளர்கள் ஒன்றுகூடி ஆங்காங்கே போராட்டம் நடத்தினோம். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள் பாதிக்கப்பட்டன. அதே போல் மாநிலத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
சுதந்திர பூங்கா
சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (அதாவது இன்று) சுதந்திர பூங்காவில் நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் பாரத் மஸ்தூர் சங்கம் பங்கேற்கவில்லை.
இவ்வாறு பிரகாஷ் கூறினார்.
Related Tags :
Next Story