திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் எல்.ஐ.சி. அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் நேற்று வழக்கம் போல் திறந்து இருந்தன. ஆனால் ஒன்றிரண்டு அதிகாரிகளை தவிர ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு வரவில்லை.
இதனால் எல்.ஐ.சி. அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊழியர்கள் வராததால் காப்பீட்டு தவணை தொகை வசூல் உள்ளிட்ட வழக்கமான பணிகள் நடைபெறவில்லை. இதனால் காப்பீட்டு தொகை செலுத்த முடியாமல் மக்கள் திரும்பி சென்றனர்.
இதேபோல் ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. இதுதவிர நாடு முழுவதும் வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் மாவட்டத்தில் ஒருசில வங்கிகளை தவிர பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் காணப்பட்டது. வங்கிகளில் அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்தனர். மேலும் ஊழியர்களின் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. எனினும் வங்கிகளில் காசோலை, வரைவோலை செலுத்துதல் உள்பட பண பரிமாற்றம் பெரிய அளவில் தேக்கம் அடைந்தன. பல வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர்.
இதற்கிடையே வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று ஒருநாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் ரூ.200 கோடிக்கு பண பரிவர்த்தனை மாற்றம் பாதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story