கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில்16 கோடி மனித வேலை நாட்கள் பயன்பாடு- பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா தகவல்
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 16 கோடி மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக சட்டசபையில் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்
பெங்களூரு, மார்ச்.29-
கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் 16 கோடி மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக சட்டசபையில் கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
மனித வேலை நாட்கள்
கர்நாடக சட்டசபையில் நேற்று துறைகளின் மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகததில் கடந்த 4 ஆண்டுகளில் கிராமப்புற வேலை உறுதி (நரேகா) திட்டத்தின் கீழ் 53 கோடி மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நடப்பு ஆண்டில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு 13 கோடி மனித வேலை நாட்களை ஒதுக்கியது. அதை முன்கூட்டியே பயன்படுத்திவிட்டோம். அதனால் மத்திய அரசு கர்நாடகத்திற்கு கூடுதலாக 3 கோடி மனித வேலை நாட்களை ஒதுக்கீடு செய்தது. அதனால் நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் இதுவரை 16 கோடி மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பு
நரேகா திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பாக்கி எதுவும் இல்லை. இந்த சம்பளம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏரிகளை மேம்படுத்துவது, பண்ணை குட்டைகளை அமைப்பது என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் 48 ஆயிரத்து 890 ஏரிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 97.91 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் இதுவரை 45.46 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அம்ரித் திட்டங்கள்
மீதமுள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் 5,377 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. இதில் இதுவரை 2,932 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. கர்நாடகத்தில் சுதந்திர தின பவள விழாவையொட்டி அம்ரித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 1,500 கிராம பஞ்சாயத்துகள் மேம்படுத்தப்படுகின்றன. அங்கு அடிப்படை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க தலா ரூ.25 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 தாலுகாக்களில் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் 100 நாள் வேலை, 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு ரத்து
மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 3 யோசனைகளை சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதனால் இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து ஆலோசிக்க வருகிற 31-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story