குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த மாணவன் சாவு
ஆரல்வாய்மொழி அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சாதுராஜ். இவருக்கு பியூலா என்ற மனைவியும், 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 3-வது மகன் மணிகண்டன் (வயது 12). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
சாதுராஜ் செடிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலை செய்து வருகிறார். சில நேரங்களில் செடிகளுக்கு அடித்ததுபோக மீதம் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை வீட்டில் வைத்திருப்பது வழக்கம்.
அதேபோல், மீதம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு குளிர்பான பாட்டிலில் ஊற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
குளிர்பானம் என நினைத்து...
இந்தநிலையில் சம்பவத்தன்று சாதுராஜின் மகன் மணிகண்டன் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பினான். சிறிதுநேரத்தில் மணிகண்டன் வீட்டில் வாந்தி எடுத்துள்ளான்.
அப்போது, அங்கு வந்த சாதுராஜின் தந்தை ஜோஸ்ராஜா இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, தனது தந்தை வாங்கி வைத்திருந்ததாக குளிர்பானத்தை குடித்ததாக அந்த பாட்டிலை தாத்தாவிடம் காட்டி உள்ளான். அதை வாங்கி பார்த்த ஜோஸ்ராஜாவுக்கு பேரன் குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
சாவு
உடனே அவர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் நேற்று காலையியில் பரிதாபமாக இறந்தான். பின்னர், இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story