பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - அமைச்சர் பதில்
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது எப்போது? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரையிலும் நிறைவேற்றப்படாத சிறந்த திட்டத்தை முதல்-அமைச்சர் நடைமுறைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்பது அதிகரிக்கும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்பி வைப்பார்கள்.
கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் சரியாக திறக்கப்படவில்லை. பள்ளிகளில் வருகிற மே மாதம் தேர்வுகள் முடிந்த பின்னர் கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை ரீதியாக ஆலோசனை செய்த பின்னர்தான் முடிவு செய்யப்படும்.
பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் கல்வித்துறைக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் கழிப்பறைகள், ஆய்வுக்கூடம், மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.
கடந்த மாதம் சேலத்தில் நடந்த மண்டல ஆய்வின்போது, மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் கையேடுகள் அறிமுகப்படுத்தினோம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய 44 பகுதிகளில் சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,100 ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும்? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகள் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் முதற்கட்டமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story