தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 778 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 778 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 9:42 PM IST (Updated: 28 March 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 778 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கி சேவை முடங்கியதால் ரூ.280 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 778 பேரை போலீசார் கைது செய்தனர். வங்கி சேவை முடங்கியதால் ரூ.280 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 

வேலை நிறுத்தம்
நாடு முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வேலை நிறுத்தம் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. 
இதன் காரணமாக நேற்று காலையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. வெளியூர் செல்லும் 13 பஸ்களும், 33 டவுன் பஸ்களும் இயங்கின. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் படிப்படியாக பெரும்பாலான பஸ்கள் இயங்க தொடங்கின.

ரூ.280 கோடி வர்த்தகம் பாதிப்பு
இதேபோல் மாவட்டத்தில் உள்ள 165 வங்கி கிளைகளில் 2 ஆயிரத்து 200 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 135 வங்கி கிளைகளில் 1,600 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.280 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்து இருந்தனர். இதனால் பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வருவாய்த்துறையில் மொத்தம் உள்ள 1,262 ஊழியர்களில் 153 பேர் மட்டும் போராட்டத்தில்        பங்கேற்று      உள்ளனர். அதேபோன்று ஊரக வளர்ச்சி துறையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் 4 பேரும், பஞ்சாயத்து யூனியன்களில் 137 பேரும், பஞ்சாயத்து செயலாளர்கள் 59 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் புதூர் வட்டாரத்தில் உள்ள 43 பஞ்சாயத்து செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இன்சூரன்சு அலுவலகம், தபால் அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் பட்டுவாடா நடைபெறவில்லை.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக தொழிலாளர்கள் நேற்று தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் சரக்குகள் வெளியில் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரி வழக்கம் போல் கொண்டு செல்லப்பட்டன. 

சாலை மறியல்
மேலும் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு தொழிற்சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஆர்.பேச்சிமுத்து, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் பாலசிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் பால்ராஜ், ராஜகோபால், ஏ.ஐ.டியு.சி. நிர்வாகிகள் சங்கர வேல், சுப்பையா, மாவட்ட தலைவர் சகாயம், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் டி.சீனிவாசன், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பூமயில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.முத்து, உரிமை கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்க மாநில தலைவர் எம்.ஜெயராஜ், மாவட்டச் செயலாளர் ராசிக் முசம்மில், மாவட்ட பொருளாளர் ரமேஷ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் குமாரவேல், மருத்துவர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர்.

778 பேர் கைது
இதேபோன்று திருச்செந்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு திருச்செந்தூர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் சிவதானுதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 97 பேரும், ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் நம்பிராஜன் தலைமையில் 58 பேரும், ஓட்டப்பிடாரம் தேரடி சந்திப்பில் ஏ.ஐ.டி.யு.சி. ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமையில் 50 பேரும், கோவில்பட்டி தபால் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை பொதுச் செயலாளர் தமிழரசன் தலைமையில் 100 பேரும், கயத்தாறில் சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனிபாண்டியன் தலைமையில் 12 பேரும், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் ஜோதி தலைமையில் 65 பேரும், எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் செல்வக்குமார் தலைமையில் 142 பேரும், நாசரேத் பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 104 பேரும் ஆக மொத்தம் 196 பெண்கள் உள்பட 778 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில், சி.ஐ.டியு. தீப்பெட்டி தொழில் சங்க செயலாளர் மோகன் ராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் காளியப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோரும், ஓட்டப்பிடாரத்தில் நடந்த போராட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி. ஒன்றிய செயலாளர் மகாராஜன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் மாரியப்பன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அழகு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராகவன் உள்ளிட்டோரும், கோவில்பட்டியில் நடந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை தலைவர் காளிதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Next Story