மாலத்தீவில் தோணிகளுக்கு கட்டண சலுகை வழங்க நடவடிக்கை
மாலத்தீவில் தோணிகளுக்கு கட்டண சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாலி துறைமுக அதிகாரி தெரிவித்தார்.
தூத்துக்குடி:
மாலத்தீவில் தோணிகளுக்கு கட்டண சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாலி துறைமுக அதிகாரி தெரிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாலத்தீவு மாலி துறைமுக அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் மெக்கன்னா உபால்டுராஜ் வரவேற்று பேசினார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய துணை வனபாதுகாவலர் பிரவீன்குமார் சிங், கடல் வாணிப துறை சர்வேயர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாலத்தீவு மாலி துறைமுக துணை தலைமை நிர்வாக அதிகாரி இப்ராகிம் அப்துல்லா கலந்து கொண்டு பேசியதாவது:-
வர்த்தகம்
தற்போது இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறோம். தோணியில் முட்டை அட்டை பெட்டி வரும்போது சேதம் அடைந்து விடுகிறது. இதனால் வேறு அட்டை பெட்டிக்கு மாற்ற வேண்டி உள்ளது. ஏற்கனவே சுங்கத்துறை அனுமதி பெற்ற சரக்கை மீண்டும் சுங்கத்துறையின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொருட்களை வெளியில் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் சரக்கு கையாளும்போது 2 பேர் இறந்து உள்ளனர். இதனால் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எங்கள் துறைமுகம் பெரிய துறைமுகம் கிடையாது. ஒரே நேரத்தில் அதிக கப்பல்களை அனுமதிக்க முடியாது. எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களை விரைவாக கையாள முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கண்டெய்னர் கப்பல்களை கையாள 100 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தளம் மட்டுமே உள்ளது. இதில் ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டுமே நிறுத்தி சரக்குகளை கையாண்டு வருகிறோம். துறைமுகத்தில் குடோன்கள் கொள்ளளவு குறைவாக உள்ளது. அதே போன்று சரக்கு கையாளுவதற்கான எந்திரங்களும் குறைவாக இருக்கிறது.
சரக்கை கையாளும் நேரம் குறைவு
இதனால் அரசு மாலி துறைமுகத்தை வேறு இடத்தில் விரிவாக்கம் செய்ய உள்ளது. 2024-க்குள் அந்த பணி முடிக்கப்படும். இதனால் கப்பல் தளம் ஒதுக்கும் பிரச்சினை முடிவுக்கு வரும். கடந்த 2015-ம் ஆண்டு ஒரு தோணியில் இருந்து சரக்கு கையாள 36 மணி நேரம் ஆனது. அது தற்போது 18 மணி நேரமாக குறைத்து உள்ளோம்.
தோணியில் சரக்குகளை ஏற்றி வருபவர்கள் மாலி துறைமுகத்துக்கு மட்டுமே வராமல், மாலத்தீவில் உள்ள மற்ற 2 துறைமுகங்களுக்கும் வரலாம். உங்களுக்கு கட்டண சலுகையை வழங்க தேவையான நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சங்க தலைவர் பிரின்ஸ்டன் பர்னாந்து, நிர்வாகிகள் ரைமண்ட், சுபாஷ் பர்னாந்து, லசிங்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story