கெட்டுப்போன உணவு சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு


கெட்டுப்போன உணவு சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு
x
தினத்தந்தி 28 March 2022 9:57 PM IST (Updated: 28 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில், கெட்டுப்போன உணவு சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஓட்டலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டினர்.

கொடைக்கானல்:
கொடைக்கானலில், கெட்டுப்போன உணவு சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஓட்டலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டினர்.
10 பேருக்கு வயிற்றுப்போக்கு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகே, வத்தலக்குண்டு சாலையில் கோடை கொச்சின் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு, கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் உணவு சாப்பிட்டனர்.
இதில் 10 பேருக்கு நள்ளிரவில் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் காலாவதியான மீன் குழம்பு சாப்பிட்டதன் எதிரொலியாக, சுற்றுலா பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் உணவு பாதுகாப்புத்துறையினரிடம் நேற்று காலை புகார் அளித்தனர். அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ் தலைமையிலான குழுவினர், அந்த ஓட்டலில் சோதனை செய்தனர்.
அப்போது மதிய உணவு தயாரிப்பதற்கு, கெட்டுப்போன இறைச்சிகள் ஓட்டலில் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கோழி இறைச்சி மற்றும் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வண்ணம் ஏற்றப்பட்ட இறைச்சி, காலாவதியான பருப்பு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஓட்டலுக்கு பூட்டு
இதுமட்டுமின்றி ஓட்டலின் உணவு சமைக்கும் அறையை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சமையல் அறை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு, உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த ஓட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் அந்த ஓட்டலுக்கு, உணவு பாதுகாப்புத்துறையினர் பூட்டு போட்டனர். ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு விடுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உடல் தகுதி மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் சரிபார்த்த பிறகு தான் ஓட்டல் திறக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
கடும் நடவடிக்கை
இதேபோல் கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதிகள், இறைச்சி மற்றும் டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் காலாவதியான, கெட்டுப்போன உணவு பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு வினியோக‌ம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story