ரூ.1 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
ஆறுகாட்டுத்துறை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வேதாரண்யம்:
ஆறுகாட்டுத்துறை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
3 படகுகளில் சென்றனர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையை சோ்ந்த விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த குமரிமுத்து(வயது 48), அமுதகுமார்(54), ரஞ்சித்(35), அருள்ராஜ்(35), நாகராஜ்(60) ஆகியோரும் அதே ஊரை சேர்ந்த சிவபாலன்(42) என்பவருக்கு சொந்தமான படகில் சுதாகர்(40), அருள்(38), ஆண்டவர்(40), வேலவன்(45), செல்வமணி (45) ஆகியோரும் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல ஆறுக்காட்டுதுறையை சேர்ந்த ரமேஷ்(43) என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரை சேர்ந்த சுரேஷ் (41), ராமச்சந்திரன்(43), ஜெகதீசன்(42), அருள்(27) ஆகியோரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை
இவர்கள் 14 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நாகை மாவட்ட மீனவர்களின் படகுகளை மறித்தனர்.
பின்னர் கடற்கொள்ளையர்கள் 2 பேர் கத்தியுடன் மீனவர்களின் படகில் ஏறி அவர்களை மிரட்டி அங்கிருந்த வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, செல்போன், பாராசூட் ஆங்கர், டார்ச்லைட், தார்ப்பாய், சிக்னல் லைட், உணவு பொருட்கள், மீன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை
இதனையடுத்து நேற்று காலை காரைக்கு திரும்பிய மீனவர்கள். இதுகுறித்து ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தாரிடம் தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்திலும், மீன்வளத்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர்.
மீனவர்களிடம் அச்சம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை உள்ளதால் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடிப்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது. ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளைர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆறுக்காட்டுத்துறை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களிடம் பொருட்களை கொள்ளையடித்து செல்வதும் காலங்காலமாக நடந்து வருகிறது.
எனவே மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-----------
Related Tags :
Next Story