காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காயல்பட்டினத்தில் காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி பூபாலராயபுரத்தைச் சேர்ந்தவர் தங்கையா. இவருடைய மகன் மரிய ஜோசப் (வயது 29). மீனவரான இவரும், காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த இருதயசாமி மகள் பிக்சியாவும் (19) காதலித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்தனர். பின்னர் அவர்கள், காயல்பட்டினம் சிங்கித்துறையில் வாடகை வீட்டில் வசித்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த பிக்சியா சம்பவத்தன்று இரவில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். உடனே அவரை சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பிக்சியாவின் தந்தை இருதயசாமி, ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது மகள் பிக்சியாவிடம் கணவர் மரிய ஜோசப் தகராறு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால்தான் அவள் தற்கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக மரிய ஜோசப்பை கைது செய்தனர். திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்ததால், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story