மத்திய அரசை கண்டித்து பொதுவேலைநிறுத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் 451 பேர் கைது


மத்திய அரசை கண்டித்து பொதுவேலைநிறுத்தம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் 451 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2022 10:14 PM IST (Updated: 28 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து நடந்துவரும் பொது வேலைநிறுத்த போராட்டத்தில் முதல்நாளான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் 451 பேர் கைது செய்யப்பட்டனர்.


கள்ளக்குறிச்சி, 

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக 2 நாட்கள் நாடுதழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

அந்த வகையில் முதல் நாளான நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தம் அமைதியான முறையில் நடந்தது. தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 

சாலைமறியல்

அந்த வகையில், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

 போராட்டத்தின் போது,  விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை சட்டம் இயற்றவேண்டும், மின்சார திருத்த சட்டம் 2021 மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

விவசாயிகளுக்கு இடுபொருள், உர மானியம், உணவு பாதுகாப்பு, பயிர் காப்பீடு போன்றவற்றிற்கு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட செலவு ரூபாய் 2.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்பணியை நகராட்சி, பேரூராட்சிகளில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் அப்பாவு உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

சின்னசேலம்

இதேபோல், சின்னசேலத்தில் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் பழனி, வட்ட தலைவர் பாபு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அ.பா. பெரியசாமி மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து, சின்னசேலம் பஸ்நிலையத்தில் சாலையில் அமர்ந்து மறியல் ஈடுபட்டனர். இதையடுத்து 50 ஆண்கள் 14 பெண்கள் உள்ளிட்ட 64 பேரை சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

சங்கராபுரம்

இதேபோல் சங்கராபுரத்தில் மும்முனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, அகில இந்திய மத்திய தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 55 பேர் கைது செய்யப்பட்டனர். 

 மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், பகண்டை கூட்டுரோடு ஆகிய பகுதிகளிலும் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 241 பெண்கள் உள்பட 451 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

Next Story