ராஜாஜி நினைவு இல்லத்தில் புனரமைப்பு பணிகள்-செய்தித்துறை இயக்குனர் ஆய்வு


ராஜாஜி நினைவு இல்லத்தில் புனரமைப்பு பணிகள்-செய்தித்துறை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 28 March 2022 10:17 PM IST (Updated: 28 March 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே உள்ள ராஜாஜி நினைவு இல்லத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

ஓசூர்:
செய்தித்துறை இயக்குனர் ஆய்வு
ஓசூர் அருகே தொரப்பள்ளியில் உள்ள மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம் செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, துறையின் இயக்குனர் ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன், ஜெயசீலன் ஆலோசனை நடத்தினார். ராஜாஜி நினைவு இல்லத்தை நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் பழமை மாறாமல் இங்கு கூடுதல் அடிப்படை வசதிகள், ஒலி, ஒளி காட்சிகள் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையில் ராஜாஜி இல்லம் செல்லும் வழியில் தகவல் பலகை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அறிவுறுத்தல்
மேலும் மண்சுவர்கள்,மூங்கில், ஓடுகள் புனரமைப்பது குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து  ராஜாஜி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்களை மெருகூட்டும் வகையில் மரச்சாமான்கள் மற்றும் பிளைவுட்டுகள் மூலம் புரைமைப்பு பணிகள், எல்.இ.டி. விளக்குகள் அமைப்பது குறித்து கருத்துரு தயார் செய்ய பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெசிந்தா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜபிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story