வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதை தடுக்க வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதை தடுத்து நிறுத்தக்கோரி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தேவசமுத்திரம் ஏரிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆண்டுதோறும் மழை காலங்களிலும் எந்தவிதமான பாதிப்புகளும் இன்றி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் பொதுப்பணித் துறையினர் நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இதனால் இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாதிக்கப்பட உள்ளனர். ஆகையால் தமிழக அரசு உரிய கள ஆய்வு செய்து வீடுகள் அப்புறப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதே போல பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த, 150-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர், எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குடியிருக்கும் இடத்தை காலி செய்தால், 150 குடும்பங்கள் வாழ்வதற்கு வழியின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே நாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் எங்களை தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story