தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 April 2022 12:06 AM IST (Updated: 1 April 2022 12:06 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதிகளில் டீக்கடைகள், பலகாரக் கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் , காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் உபயோகமற்ற பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் மற்றும் அழுகிய பொருட்களை கடைக்காரர்கள் வாங்கல் பிரிவு சாலையில் உள்ள தார்சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாக கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மண்மங்கலம், கரூர். 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தங்களின் கால்களை கழுவி விட்டு வரவேண்டும் என்பதற்காக கோவிலின் நுழைவு வாயில் முன்பு தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த குழாய்கள் அனைத்தும் பயனற்று தண்ணீர் வராமல் உள்ளதால் பக்தர்கள் தங்களின் கால்களை கழுவாமலேயே கோவிலுக்குள் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய்களை சரி செய்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
பாலசுப்பிரமணியம், திருச்சி.
திருச்சி வடிகபுத்தூர், சோமரசம்பேட்டை கீழவயலூர் சாலையோரத்தில் கழிவு நீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான கழிவு பொருட்கள் தேங்கியுள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர்.  எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், சோமரசம்பேட்டை, திருச்சி.

சாலையோரம் கொட்டப்படும் நண்டு கழிவுகள் 
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி எதிரில் அரசு முந்திரி தோட்டம் அருகில் புதுக்கோட்டை - மருத்துவக்கல்லூரி சாலையில்  நண்டு கழிவுகளை பெட்டி பெட்டியாக கொண்டுவந்து போட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

ரெயில்வே ஜங்ஷன் ரவுண்டானாவில்  சிக்னல்கள் செயல்படுமா?
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த வழியாக புறநகர் மற்றும் சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும். மேலும் இப்பகுதிகளில் எண்ணற்ற கடைகள் உள்ளது. இதனால் பகல் நேரத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ரவுண்டானாவில் சிக்னல்கள் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சிக்னல்கள் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

பஸ் நிலையம் ஒழுங்குபடுத்தப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ் நிலையம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த பஸ் நிலையத்தில்  பல கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் பஸ்  நிலையம் திறக்கப்படாமல் பஸ்கள் வந்து செல்கின்றன. கறம்பக்குடிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் அதிக அளவில் வருகின்றன. ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த ஊர் பஸ் எங்கே நிற்கிறது என்று தெரியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 
கும்பேசேகரன், கறம்பக்குடி, புதுக்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட எரங்குடியில் இருந்து கலிங்கி வரை செல்லும் தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், எரங்குடி, திருச்சி. 

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, நவல்பட்டு கிராமம் கவுண்டர் தெருவில் உள்ள ஒரேஒரு குடிநீர் குழாய்லும் தண்ணீர் வராமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் சாலை மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். சாலைகள் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதால் குண்டும், குழியாக காட்சி அளிக்கிறது. சாக்கடைகள் அனைத்தும் பழுதடைந்து இடிந்துவிட்டதால், சாக்கடை நீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜயகுமார், கவுண்டர் தெரு, திருச்சி. 

ஆபத்தான பாதாள சாக்கடை 
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே சாலையின் நடுவே செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரிசெய்ய மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பாதாள சாக்கடை மூடி இல்லாமல் பாதாள சாக்கடை திறந்து உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி.

Next Story