தையல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி


தையல் தொழிலாளி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 April 2022 12:42 AM IST (Updated: 1 April 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் நடந்த விபத்தில் தையல் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் நடந்த விபத்தில் தையல் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. ஆலய தெருவைச் சேர்ந்தவர் சொரிமுத்து. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 20). இவர் பாலிடெக்னிக் படித்து விட்டு ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 7.50 மணிக்கு மாரிமுத்து தனது மோட்டார்சைக்கிளில் வீட்டில் இருந்து ஆலங்குளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

ஆலங்குளம் அம்பை ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் முன் சென்றபோது, அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஆலங்குளம் நல்லூர் காமராஜர் நகரைச் சேர்ந்த சோனாசலம் என்பவருடைய மகன் முருகேசன் (50) மீது மாரிமுத்துவின் மோட்டார்சைக்கிள் மோதியது.
இதனால் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே சாய்ந்தது. அதில் இருந்த வாலிபர் மாரிமுத்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். ரோட்டை கடக்க முயன்ற முருகேசனுக்கும் படுகாயம் ஏற்பட்டது.

சாவு

உடனே, அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து முருகேசனையும், மாரிமுத்துவையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாரிமுத்துவும், முருகேசனும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தையல் தொழிலாளி

விபத்தில் பலியான முருகேசன் தையல் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். முருகேசனுக்கு அகஸ்டின் என்ற மகனும், ஆகாசினி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story