கறம்பக்குடி அருகே ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 65 பேர் காயம்
கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 65 பேர் காயம் அடைந்தனர்.
கறம்பக்குடி,
ஜல்லிக்கட்டு
கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் மீனமுனிஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உதவி கலெக்டர் கருணாகரன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சீறிப்பாய்ந்த காளைகள்
முன்னதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது ஒலிப்பெருக்கியில் காளையின் உரிமையாளர் பெயர், ஊர் போன்ற விவரங்களும், பரிசு குறித்த தகவல்களும் அறிவிக்கப்பட்டன.
வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. ஆக்ரோஷத்துடன் துள்ளிக்குதித்த காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். பாய்ச்சல் காட்டி பயமுறுத்திய காளைகளை வீரர்கள் சிலர் பாய்ந்து சென்று அதன் திமிலை பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர்.
65 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 913 காளைகள் களம் கண்டன. 300 மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக கலந்துகொண்டு முரண்டுபிடித்த காளைகளை அடக்கினர்.
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 65 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, மின்விசிறி, சைக்கிள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டிராக்டரில் திரண்டு வந்த பெண்கள்
ஜல்லிக்கட்டு போட்டியை காண கறம்பக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் டிராக்டர்களில் பயணித்து மீனம்பட்டி வந்திருந்தனர். சில பெண்கள் டிராக்டர்களின் மேலே நின்றபடியே ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.
மாலை 4.30 மணிவரை நடந்த ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கி 2 மணிக்குள் முடிக்கப்படுவது வழக்கம். ஆனால் காளைகள் அதிகம் வந்திருந்ததாலும், சில காளைகள் சுற்றி நின்று பாய்ச்சல் காட்டியதாலும் நேரம் அதிகமானது. இதனால் 3 மணிக்குள் முடிக்க அதிகாரிகள் வற்புறுத்தினர். இருப்பினும் வெளியூர்களிலிருந்து காளைகள் வந்திருந்ததால் ஊர் பிரமுகர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் வேண்டுகோளின்பேரில் மாலை 4.30 மணி வரை ஜல்லிக்கட்டு நடந்தது.
Related Tags :
Next Story