புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளில் வார்டு நிலைக்குழு தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
புதுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற வார்டு நிலைக்குழு தேர்தலில் தி.மு.க கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.
புதுக்கோட்டை,
மறைமுக தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு, நியமனக்குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரிவிதிப்பு அமல்முறையீட்டு குழுவில் 4 உறுப்பினர்களும், நியமன குழுவில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலா ஒருவரும், ஒப்பந்த குழுவில் நகராட்சியில் தலா ஒரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் 27 வார்டுகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும், 8 வார்டுகளில் அ.தி.மு.க. கவுன்சிலர்களும், 7 வார்டுகளில் சுயேச்சை கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குழு உறுப்பினர்கள் தேர்வு
இந்தநிலையில் நிலைக்குழு தேர்தல் புதுக்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கவுன்சிலர்களை தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.
அதை தொடர்ந்து நியமன குழு உறுப்பினருக்கு 36-வது வார்டு கவுன்சிலர் வளர்மதியும், ஒப்பந்தக்குழு உறுப்பினருக்கு 28-வது வார்டு கவுன்சிலர் எட்வர்ட் சந்தோசநாதனும், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினருக்கு 39-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரியும், 20-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்பாபுவும், 30-வது வார்டு கவுன்சிலர் லதாவும், 5-வது வார்டு கவுன்சிலர் அடைக்கலம் ஆகிய 4 பேர் உள்பட அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி கமிஷனர் நாகராஜன் அறிவித்தார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அறந்தாங்கி நகராட்சி
அறந்தாங்கி நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர் மற்றும் வரி விதிப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் வரி மேல் முறையீட்டு உறுப்பினர்களாக சரோஜா (20-வது வார்டு தி.மு.க.), காசிநாதன் (11-வார்டு தி.மு.க.), உதயசூரியா (15-வது வார்டு தி.மு.க.), கிருபாகரன் (7-வது வார்டு காங்கிரஸ்) ஆகிய 4 பேரும், நியமன குழு உறுப்பினராக பிச்சை முகம்மது (22-வது வார்டு தி.மு.க.) ஒப்பந்த குழு உறுப்பினர் பிரியா (10-வது வார்டு தி.மு.க.) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி கமிஷனர் லீமாசைமன் தெரிவித்தார்.
இதையடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு தலைவர், துணை தலைவர், நகர்மன்ற கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story