வெம்பக்கோட்டை அருகே தோண்ட, தோண்ட வெளிவரும் அரிய பொருட்கள்


வெம்பக்கோட்டை அருகே தோண்ட, தோண்ட வெளிவரும் அரிய பொருட்கள்
x
தினத்தந்தி 1 April 2022 1:07 AM IST (Updated: 1 April 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே நடந்துவரும் அகழாய்வில் தோண்ட தோண்ட வெளிவரும் பழமையான பொருட்கள் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளன.

தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே நடந்துவரும் அகழாய்வில் தோண்ட தோண்ட வெளிவரும் பழமையான பொருட்கள் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளன.
அகழாய்வு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் 2 குழிகளும், அரை மீட்டர் ஆழத்தில் மற்றொரு குழியும் தோண்டப்பட்டுள்ளன. 
நேற்றைய அகழாய்வு பணியின் போது, சங்கு வளையல் செய்ய பயன்படுத்திய கருவிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், காதணிகள், நெசவு தொழிலுக்கான தக்களி என்ற பொருள், மேலும் அரியவகை கல் மணிகள், சிவப்பு நிறத்தில் சூது பவளம், செவ்வந்தி கல், சுடுமண்ணால் செய்யப்பட்ட தட்டுகள் போன்ற பழங்கால அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பொருட்கள் கிடைக்கும்
இந்த பொருட்களை பற்றி அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறும்போது, “அகழாய்வு நடந்து வரும் மற்ற இடங்களை காட்டிலும் மேட்டுக்காடு பகுதியில் எதிர்பார்த்ததைவிட விரைவாக பொருட்கள் கிடைத்து வருகின்றன. தோண்ட தோண்ட பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பின்னரே அகழாய்வுக்கு மற்ற குழிகள் தோண்டும் பணி தொடங்கும்” என்றார். அப்போது வெம்பக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகத்தாய், ஆதரவற்றோர் உண்டு உறைவிடப்பள்ளி இயக்குனர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story