நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2022 1:11 AM IST (Updated: 1 April 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

கீரனூர், 
கீரனூர் தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல் குறித்து பல தில்லுமுல்லுகள் நடப்பதாக நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் கீரனூரை சேர்ந்த பாலா என்பவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சர்வே அலுவலர் கீரனூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த பாலாவை கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அங்கு வந்த வருவாய்த்துறை அலுவலர்கள் அவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஆதாரங்கள் உள்ளதா? என விசாரணை நடத்தினர். அவர் சில ஆவணங்களை போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது. வருவாய்த்துறை தரப்பில் இந்த வீடியோவை அழிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுமதியின்றி வீடியோ பதிவு அழிக்க முடியாது என அவர் கூறினார். இதனை தொடர்ந்து நீண்ட விசாரணைக்கு பின் பாலா அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story