கஞ்சா விற்ற மேலும் 6 பேர் கைது


கஞ்சா விற்ற மேலும் 6 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2022 1:11 AM IST (Updated: 1 April 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் தொடரும் அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகரில் தொடரும் அதிரடி வேட்டையில் கஞ்சா விற்ற மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடரும் அதிரடி வேட்டை

தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நெல்லை மாநகரிலும் போலீசார் கடந்த 3 நாட்களாக தொடர் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாநகர மேற்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் டவுன் போலீசார் டவுன் தடிவீரன் கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்றதாக டவுன் வெள்ளம் தாங்கி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சபரி ஸ்ரீ கண்ணன் (வயது 36) என்பவரை கைது செய்து, 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இதேபோல் கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் கொடுத்த தகவலின் பேரில், பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் பாளையங்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக பர்கிட் மாநகர் அவினாசி பேரி பகுதியை சேர்ந்த முருகன் (20) என்பவரை கைது செய்து, 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாட்ஷா மற்றும் போலீசார் நெல்லை ரெட்டியார்பட்டி பாலம் அருகே ரோந்து சென்ற போது அங்கு கஞ்சா விற்றதாக ரெட்டியார்பட்டி எஸ்.ஆர். குளம் பகுதியை சேர்ந்த மகாராஜன் (20) என்பவரை கைது செய்து,  70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் மற்றும் போலீசார் ராஜகோபாலபுரம் நான்குவழிச் சாலை அருகே ரோந்து சென்றபோது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக எஸ்.ஆர். குளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (20) என்பவரை கைது செய்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

8 கிலோ பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் வடக்கூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே லோடு ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல காடு வெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, 8 கிலோ கஞ்சா மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Next Story