அரசு பணியாளர் தேர்விற்கான மாதிரி பயிற்சி வகுப்பு
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசுப்பணியாளர் தேர்விற்கான மாதிரி பயிற்சி வகுப்பினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அரசுப்பணியாளர் தேர்விற்கான மாதிரி பயிற்சி வகுப்பினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
பயிற்சி வகுப்பு
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 மற்றும் குரூப்- 2 ஏ முதல்நிலை தேர்விற்கான மாதிரி தேர்வு தொடர்பான பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. உதவி இயக்குனர் ரமேஷ்குமார் வரவேற்றார்.
பயிற்சி வகுப்பை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, குரூப்- 2 மற்றும் குரூப்- 2 ஏ.தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே போட்டித்தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரித்தேர்வு வகுப்புகள் வாரந்தோறும் விடுமுறை நாட்களில் நடத்தப்பட உள்ளது.
மாதிரி தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி குரூப்- 2 மற்றும் குரூப்- 2 ஏ முதல்நிலைத் தேர்விற்கான மாதிரித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மாதிரித் தேர்வுகள் வருகிற 3-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 04362-237037 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ அல்லது studycircletnj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பதிவு செய்து கொண்டு பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், யாகப்பா பள்ளி தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ், ஸ்கேனர் மற்றும் கணிப்பொறியினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயன்படுத்தும் பொருட்டு நன்கொடையாக வழங்கினார்.
Related Tags :
Next Story