தாய்-மகளை தாக்கிய மானாமதுரை போலீசார் மீது வழக்குப்பதிவு


தாய்-மகளை தாக்கிய மானாமதுரை போலீசார் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 April 2022 1:41 AM IST (Updated: 1 April 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

தாய்-மகளை தாக்கிய மானாமதுரை போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 
தாய்-மகளை தாக்கிய மானாமதுரை போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஊர்மக்கள் முன்பு தாக்குதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த நாகலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை. நானும் எனது தாயாரும் மண் வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டின் அருகில் வசித்த வீரமணி குடும்பத்தினர் எங்கள் மீது போலீசில் பொய் புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த 21.10.2021 அன்று எனது தாயாரை மானாமதுரை போலீசார் பிடித்துச்சென்று நள்ளிரவு வரை போலீஸ் நிலைத்திலேயே வைத்திருந்தனர். இதுகுறித்து எனது தாயார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம், வீரமணி என்பவர் தனது இடத்தை அளந்து கொடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவும் கேட்டுள்ளார். அதன்பேரில் எங்கள் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டையும், எங்களையும் தாக்கினர். உடைகளை கிழித்து ஊர்மக்கள் முன்பு நிர்வாணமாக்கினர்.
போலீசாரிடம் ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என என் தாயார் கேட்டதற்கு அவரை லத்தியால் தாக்கி வலது கையை முறித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தோம். எனது தாயாரை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கண்டனம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் தாயார் போலீசாரால் தாக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மானாமதுரை போலீஸ் துைண சூப்பிரண்டுக்கு இந்த கோர்ட்டு கண்டனத்தை தெரிவிக்கிறது. மனுதாரர் அளித்த புகார் மனுவின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை முறையாக விசாரித்து 12 வாரத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story