‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வெள்ளை நிற வா்ணம் பூசப்படுமா?
ஈரோடு கொல்லம்பாளையத்தில் இருந்து சாஸ்திரிநகர் செல்லும் சாலையான லெனின் வீதியில் கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம் உள்ளன. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் 5 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்பவர்கள் தவறி கீழே விழும் ஆபத்து உள்ளது. எனவே வேகத்தடைகளின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்பட வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
லட்சுமி, ஈரோடு.
மின் கம்பத்தை சுற்றி செடி, கொடிகள்
அந்தியூர் தவுட்டுப்பாளையம் பாலம் அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தின் வழியாக உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த மின் கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதில் மரக்கன்றின் கிளை மின் கம்பிக்கு மிக அருகில் உள்ளது. இதனால் மின் கசிவு ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பத்தை சுற்றி வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவீந்திரன், புதுப்பாளையம்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி அருகே நாயக்கன்காட்டில் இருந்து பச்சைமலை செல்லும் ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக செல்வோர், வருவோர் அங்குள்ள குப்பையில் தீ வைத்து விடுகிறார்கள். இதனால் கரும்புகை எழும்பி அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர்களுக்கு கண் எரிச்சல், சுவாசக்கோளாறு போன்றவை ஏற்படுகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பச்சைமலை.
அப்புறப்படுத்த வேண்டும்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் பாளையம் பகுதியில் வளைவு இருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அறிவதற்காக விபத்தை தடுக்க சாலையோரத்தில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட சிறிய அளவிலான இரும்பு கம்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த இரும்பு கம்பி தெரியாத அளவுக்கு குப்பை போடப்பட்டு மூடப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு வளைவு இருப்பது தெரியாமல் போகிறது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
அருள், புதுப்பாளையம்.
Related Tags :
Next Story