ஆந்திராவில், கர்நாடக பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல்


ஆந்திராவில், கர்நாடக பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல்
x
தினத்தந்தி 1 April 2022 2:08 AM IST (Updated: 1 April 2022 2:08 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டலில் தண்ணீர் பிடித்த தகராறில் ஆந்திராவில் கர்நாடக பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. மேலும் 200 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகளுக்கு தீவைக்கப்பட்டது.

பெங்களூரு: ஓட்டலில் தண்ணீர் பிடித்த தகராறில் ஆந்திராவில் கர்நாடக பக்தர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. மேலும் 200 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. 

மல்லிகார்ஜூன சாமி கோவில்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலாவில் புகழ்பெற்ற மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையையொட்டி நடக்கும் ஆண்டு திருவிழாவில் வடகர்நாடகத்தின் ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாவி, பல்லாரி, சிக்கோடி, கலபுரகி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
திருவிழாவில் கலந்து கொள்ள கர்நாடக பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். 

கோடரியால் தாக்குதல்

இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தாலுகா ஜனமட்டி என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரீசைலா வாரிமட்(வயது 28) உள்பட சில கர்நாடக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் மல்லிகார்ஜூனா சாமி கோவிலுக்கு சென்றனர். இந்த நிலையில் கோவில் அருகே உள்ள ஓட்டலில் ஸ்ரீசைலா குடிக்க தண்ணீர் பிடித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஸ்ரீசைலாவை கத்தி, கோடரியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற மற்றொரு கர்நாடக பக்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஸ்ரீசைலா உள்பட 2 பேரையும் சிலர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைகளுக்கு தீ வைப்பு

இதற்கிடையே ஸ்ரீசைலா தாக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக பக்தர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது கோவில் அருகே இருந்த கடைகளுக்கு சிலர் தீ வைத்தனர். மேலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட கர்நாடக வாகனங்கள் சேதம் அடைந்தன. 

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீசைலா, ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

Next Story