தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 April 2022 2:09 AM IST (Updated: 1 April 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு

தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் எதிேர உள்ள சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி பாதாள சாக்கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா,பெத்தானியாபுரம்.
சுகாதார சீர்கேடு 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றுகளும் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள்சிரமப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, இளையான்குடி.
குடிநீர் தட்டுப்பாடு
மதுரை மாநகராட்சி 1- வது வார்டுக்குட்பட்ட புதுவிலாங்குடி செம்பருத்தி நகர் அய்யப்பன் பகுதியில் சில நாட்களாக குடிநீர் முறையாக வருவதில்லை. கோடை காலம் என்பதால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.  குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? 
மயில்சாமி, மதுரை.
ஓடை தூர்வாரப்படுமா?
விருதுநகர் மாவட்டம் மல்லிப்புதூர் கிராமத்தில் உள்ள ஊருணிக்கு வருகின்ற நீர்வரத்து ஓடைபாதை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஊருணிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. மேலும், ஊருணியில் தண்ணீரின் இருப்பு குறைந்து வருவதால் இப்பகுதி விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படுகின்றது. எனவே, அதிகாரிகள் வரத்துப்பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.
பொதுமக்கள், மல்லிப்புதூர்.
கால்நடைகள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மெயின் சாலையில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகளும் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கருப்பசாமி பாண்டியன், முதுகுளத்தூர்.
ஆபத்தான மின்கம்பம்
 விருதுநகர் மாவட்டம் எம்.புதுக்குளம் கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஆபத்தான  நிலையில்  உள்ளது. புதிய மின்கம்பம் கொண்டுவரப்பட்டும் இன்னும் மின் இணைப்பு மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. ஆபத்தான மின்கம்பத்தால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும்.
சிவா, எம்.புதுக்குளம். 

Next Story