வாரிசுகளுக்கு கருணைத்தொகை பெற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுகோள்
வாரிசுகளுக்கு கருணைத்தொகை பெற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரியலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த கருணை தொகையை பெறுவதற்கு, உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் வழங்கிய தீர்ப்பு வழிகாட்டுதலாக பின்பற்றப்படுகிறது. இதன்படி மாவட்டங்களில் 20.3.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 60 நாட்களுக்குள், அதாவது அடுத்த மாதம் (மே) 18-ந்தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். 20.3.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் ரமணசரஸ்வதி (அரியலூர்), அங்கையற்கண்ணி (பொறுப்பு), (பெரம்பலூர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story