குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது
குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்:
பாலியல் தொந்தரவு
பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய விவசாயிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உடையவரான அவர், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவர் அடித்து துன்புறுத்தியதால், அவருடைய மனைவி கோபித்து கொண்டு வெளிமாநிலத்தில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த விவசாயி, குடிபோதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் 13 வயதுடைய தனது மூத்த மகளுக்கு இரவு முதல் அதிகாலை வரை வலுக்கட்டாயமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தந்தையின் கொடூர செயலை கண்டு 2-வது மகள் அழுதுள்ளார். பின்னர் சகோதரிகள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி பக்கத்து வீட்டு திண்ணையில் படுத்து தூங்கியுள்ளனர்.
போக்சோவில் கைது
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் மூத்த மகளுக்கு விவசாயி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது தாயிடம் செல்போன் மூலம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து வெளிமாநிலத்தில் இருந்து உடனடியாக புறப்பட்டு வந்த சிறுமியின் தாய், இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளுக்கு தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story