தினத்தந்தி’ புகார் பெட்டி
தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்திக்கு பாராட்டு
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைக்கப்பட்டு பயனற்ற நிலையில் இருந்தது. மேலும் காந்தி ஸ்டேடியத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்தன என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் சரிசெய்யப்பட்டது. அதேபோல் கழிப்பிடத்திற்கு ஒரு நபரை நியமித்து சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்கள். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-மா.குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.
ஆபத்தான மின்கம்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த சின்ன மண வாரணப்பள்ளி கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்தின் மேல் பகுதியில் காங்கிரீட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் உடைந்து விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் அருகே ரேஷன் கடை மற்றும் வீடுகள் அமைந்துள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபிநாத், சின்னமண வாரணப்பள்ளி, கிருஷ்ணகிரி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமம் நேருநகர் ராஜராஜன் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சரி செய்ய வேண்டும்.
-பிரவீன்குமார், தடங்கம், தர்மபுரி.
குண்டும், குழியுமான சாலை
சேலத்தை அடுத்த பச்சைப்பட்டியில் இருந்து பஜார் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காணப்படும் இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து தர முன்வருவார்களா?
-முரளிதரன், பச்சைப்பட்டி, சேலம்.
பள்ளியில் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் மாரமங்கலத்துபட்டி அருகே சின்னபூசாலியூர் நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுவதால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. ஒரு மாதகாலமாக இதே நிலை நீடிக்கிறதால் இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், மரமங்களத்துபட்டி, சேலம்.
Related Tags :
Next Story