பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூதப்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் யு.எ.ராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.விவேகானந்தன், மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதில் அம்மாபேட்டை நகர செயலாளர் அப்துல் அஜீஸ், ஜெயச்சந்திரன், குணசேகரன், சென் புவனேஸ்வரன், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் பட்லூர் காங்கிரஸ் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட முன்னாள் தலைவர் பி.எஸ்.எஸ்.சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாநில முன்னாள் செயலாளர் சேது வெங்கட்ராமன், அம்மாபேட்டை வட்டார விவசாய தலைவர் பிரகாஷ், வட்டார முன்னாள் தலைவர் அருளானந்தம், இளைஞர் அணி தலைவர் சேட், மகளிர் தலைவி மேரி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அண்ணாசிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டார தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் திரவியம் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story