சத்தியமங்கலம் பகுதியில் நமக்கு நாமே திட்டம் மூலம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கூட்டத்தில் நகராட்சி தலைவர் தகவல்
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நகராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தெரிவித்து உள்ளார்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நகராட்சி கூட்டத்தில் அதன் தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தெரிவித்து உள்ளார்.
கூட்டம்
சத்தியமங்கலம் நகராட்சி கவுன்சில் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணக்குமார், துணைத்தலைவர் ஆர்.நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:-
நமக்கு நாமே திட்டம் மூலம்...
எஸ்.வேலுச்சாமி (தி.மு.க.): எனது வார்டில் புளியங்கோம்பை, ஆண்டவர் நகர், மொண்டிக்கருடு, கம்பத்தராயன்புதூர், புதுவலவு ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது கவுன்சிலர்கள் பலர் எழுந்து தங்களுடைய வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சினையையும் எடுத்து கூறினார்கள்.
ஆர்.ஜானகி (தலைவர்):- நமக்கு நாமே திட்டத்தில் அதிகப்படியாக கிடைக்கும் நிதியின் மூலம் 27 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிதாக 5 இடங்களில் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் சுலபமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். சத்தியமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்குழாய் கிணறுகள் ரூ.5 லட்சம் செலவில் பழுது பார்க்கப்படும். அதுமட்டுமின்றி நகரில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டு உள்ளதால், அவைகள் ரூ.5 லட்சம் செலவில் சரி செய்யப்படும். நகராட்சிக்கு உள்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.
ரூ.600
லட்சுமணன் (அ.தி.மு.க.): கூட்டத்துக்கு வரும் கவுன்சிலர்களுக்கு அமர்வு கட்டணமாக கடந்த 15 ஆண்டுகளாக ரூ.600 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது. இதை ஏற்றிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.ஜானகி ராமசாமி (தலைவர்): நீங்கள் ஆட்சியில் இருந்தபோதே கேட்டிருக்கலாமே. மேலும் பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவும், நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தவும் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவிடப்படும்.
கூட்ட முடிவில் 2021-22-ம் ஆண்டு சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, காலியிட வரி போன்றவைகளை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே 100 சதவீதம் வசூல் செய்ய ஊழியர்களுக்கு தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி, துணைத்தலைவர் ஆர்.நடராஜ், ஆணையாளர் சரவணகுமார் ஆகியோர் நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
கூட்டத்தில் 27 வார்டுகளின் கவுன்சிலர்கள், என்ஜினீயர் சிவக்குமார், சுகாதார அலுவலர் சக்திவேல், நகராட்சி மேலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story