மகளை பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை


மகளை பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை
x
தினத்தந்தி 1 April 2022 2:37 AM IST (Updated: 1 April 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், கீழ் கோா்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும் கர்நாடக ஐகோா்ட்டு அதிரடி தீர்ப்பளித்து உள்ளது.

பெலகாவி: பெலகாவியில் மகளை மிரட்டி பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும், கீழ் கோா்ட்டு தீர்ப்பை ரத்து செய்தும் கர்நாடக ஐகோா்ட்டு அதிரடி தீர்ப்பளித்து உள்ளது.

பெற்ற மகள் பலாத்காரம்

பெலகாவி (மாவட்டம்) புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறாள். இந்த சிறுமிக்கு காது கேட்காது. ஆட்டோ டிரைவரின் மனைவியால் வாய் பேச முடியாது. இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத போது தனது மகளை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 அதன்பிறகு, தனது மகளை மிரட்டி அவர் தொடர்ந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த சிறுமியின் பாட்டி, பெலகாவி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஐகோர்ட்டில் மேல்முறையீடு

இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த பெலகாவி போக்சோ சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி, சிறுமியை பலாத்காரம் செய்ததற்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி,  ஆட்டோ டிரைவரான தந்தையை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோா்ட்டில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகளான நரேந்திர பிரசாத், ராஜேந்திர பாதாமிகல் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டுகள் கடுங்காவல்

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது சிறுமியை, பெற்ற தந்தையே மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமியிடமோ, தாயிடமோ உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதனை சிறப்பு கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை.

பெற்ற தந்தையே பலாத்காரம் செய்திருப்பதாக சிறுமி பொய் குற்றச்சாட்டு கூறுவதற்கான ஆதாரங்களும் இல்லை. அதனால் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். 

Next Story