பசவராஜ் பொம்மை ஆண்மகனாக இருந்தால் மத பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; குமாரசாமி ஆவேசம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆண்மகனாக இருந்தால் மத பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.
ராமநகர்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆண்மகனாக இருந்தால் மத பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி ஆவேசமாக கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மாம்பழ விளைச்சல்
கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பொழுது விடிந்தால் போதும், தாசில்தாரை சந்தித்து கடிதம் கொடுப்பது, கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்குகிறார்கள். இதனால் சமுதாயத்தில் பெரிய சம்பவம் ஏற்படும் அபாயம் உள்ளது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் சமூக விரோதிகள். இவர்களுக்கு விவசாயிகளின் வாழ்க்கை பற்றி தெரியுமா?.
நமது விவசாயிகள் ஆடு வெட்டினாலும் அதை சுத்தம் செய்ய முஸ்லிம் சமூகத்தினர் வருகிறார்கள். ஆனால் இப்போது ஹலால் இறைச்சியை வாங்காதீர்கள் என்று சொல்கிறார்கள். விவசாயிகளிடம் மாம்பழம், திராட்சை பழங்கள் வாங்க இந்த சமூக விரோதிகள் வருவார்களா?. திடீரென பெய்த மழையால் பல இடங்களில் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டை பாழாக்குகிறார்கள்
விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் தங்களின் வயிற்று பிழைப்புக்காக நாட்டை பாழாக்குகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக நாம் ஹலால் இறைச்சியை தான் சாப்பிட்டு வந்துளோம். நமக்கு என்ன ஆகிவிட்டது. நாம் நன்றாக இருக்கிறோம் அல்லவா?. கொரோனா காலத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் செத்தனர். அப்போது இந்த அரசு என்ன செய்தது?.
அப்போது அந்த அமைப்பினர் எங்கே இருந்தனர்?. மாநிலத்தில் இவ்வளவு விஷயங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறனறன. ஆனால் இந்த அரசு மட்டும் எதுவும் தெரியாதது போல் மவுனமாக இருக்கிறது. முதல்-மந்திரியின் மவுனத்திற்கு அர்த்தம் என்ன?. சமுதாயத்தை உடைக்கும் சமூக விரோதிகள் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்கிறார்கள். அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மவுனமாக இருக்க முடியாது
அரசியல் அமைப்பை மரியாதை கொடுக்கிறீர்களா?. இந்த அரசு எதற்காக அம்பேத்கர் ஜெயந்தி விழாவை நடத்த வேண்டும். எனக்கு ஓட்டு முக்கியம் அல்ல. இந்த மாநிலம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இனியும் நான் மவுனமாக இருக்க முடியாது. இந்த விவகாரங்கள் குறித்து பேச காங்கிரசாருக்கு தைரியம் இல்லை. ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்.
இந்துக்கள் ஓட்டு போடுவார்களோ இல்லையோ என்ற பயம் எனக்கு இல்லை. உத்தரபிரதேசத்தில் உங்களது ஆட்டத்தை ஆடுங்கள். அந்த ஆட்டத்தை இங்கு ஆட வேண்டாம். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆண் மகனாக இருந்தால் இந்த மத பிரச்சினைகளில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
பா.ஜனதா கண்டனம்
குமாரசாமியின் ஆண்மகன் குறித்த இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து தவறை உணர்ந்து கொண்ட குமாரசாமி, முதல்-மந்திரியை ஆண் மகனா? என நான் கூறியது தவறு. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று குமாரசாமி கூறினார்.
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் நிகில் மீண்டும் போட்டி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குமாரசாமியின் மகன் நிகில், மண்டியா தொகுதியில் போட்டியிட்டு, நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நிகில் மீண்டும் மண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்று குமாரசாமி நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து குமாரசாமி கூறுகையில், வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனது மகன் நிகில் மண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார். எனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். கடந்த முறை எங்கள் குடும்பத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தினர். காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி செயல்பட்டன என்றார்.
Related Tags :
Next Story